Wednesday, March 17, 2010

உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் உலகின் டாப் 10 மோசமான செல்போன்கள்!
செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது.
ஆனால் இதே செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.
அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (ஈடபிள்யூஜி) சமீபத்தில் ஒரு செல்போன் பட்டியலை வெளியிட்டது.

இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific Absorption Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.
அந்த லிஸ்ட்:
மோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.50 W/kg
ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3G S)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.52 W/kg
எச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.39 W/kg
பிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.55 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg
சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.71 W/kg
மோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.69 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg
மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.86 W/kg
பேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.92W/kg

எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.79W/kg
சாம்ஸங் மிதிக் (Samsung Mythic)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.64W/kg
ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.
மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே செல்போன் வாங்கும் வாங்கும் முன் அல்லது பயன்படுத்தும் முன் இந்த கதிர்வீச்சு சமாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ளவும்!

Thursday, March 11, 2010

பாக்., கிரிக்கெட்டுக்கு அவமானம்! *7 வீரர்களுக்கு தண்டனை

காரச்சி: பாகிஸ்தான் அணியில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சோயப் மாலிக், ராணாவுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கு தடையாக இருந்த "சீனியர்கள்' முகமது யூசுப், யூனிஸ் கான் ஆகியோர் பாகிஸ்தான் சார்பில் போட்டிகளில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 7 வீரர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கும் (பி.சி.பி.,) பிரச்னைகள் ஏற்படுவது சகஜம். அரசியல் தலையீடு மற்றும் "மேட்ச் பிக்சிங்' என தொடர்ந்து இடையூறுகள் ஏற்படும். இதனால் அணியின் வெற்றி வாய்ப்பும் பாதிக்கப்படும். சமீப காலமாக வீரர்களுக்குள் கோஷ்டி பூசல், போர்டுடன் மோதல் தவிர, "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபடுவது போன்ற செயல்கள் அதிகமானது.
இதன் உச்சக்கட்ட வெளிப்பாடு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய தொடரில் தெரிந்தது. மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு "டுவென்டி-20' போட்டிகள் என பாகிஸ்தான் அணி, தான் பங்கேற்ற 9 போட்டிகளிலும் தோல்வியடைந்து, வெறுங்கையுடன் நாடு திரும்பியது.
விசாரணை கமிட்டி:
இதனால் அதிர்ச்சி அடைந்த பி.சி.பி., தோல்வி குறித்து விசாரிக்க, வாசிம் பாரி தலைமையில் ஆறு பேர்கள் கொண்ட கமிட்டியை அமைத்தது. அணியின் கேப்டன் முகமது யூசுப், பயிற்சியாளர் இன்தி காப் ஆலம், துணை பயிற்சியாளர், மானேஜர் மற்றும் 13 வீரர்கள் விசாரணைக்கு <உள்ளானார்கள். முடிவில் இந்த கமிட்டி, தனது அறிக்கையை பி.சி.பி.,யிடம் சமர்ப்பித்துள்ளது. இதன் மேல் நடவடிக்கை எடுக்கும் முன், இந்த அறிக்கை நேற்று மீடியாவில் வெளியானது.
இந்த அறிக்கை குறித்து பி.சி.பி., செய்தித் தொடர்பாளர் நதீம் சர்வார் கூறியது:
முகமது யூசுப், யூனிஸ் கான் இருவரும் அணியில் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் எதிராகவே செயல்பட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அணியின் செயல்பாடும்பாதிக்கப்பட்டது. இவர்களை தேசிய அணியின் எந்த வித கிரிக்கெட்டிலும் பங்கேற்க விடக்கூடாது. தவிர, "டுவென்டி-20' ஆட்டத்தின் போது அப்ரிதி பந்தை கடித்தது மிகவும் அவமானச் செயல். இதனால் பாகிஸ்தானுக்கு தலைகுனிவு ஏற்பட்டது. இவருக்கு அபராதம் விதிப்பதுடன், 6 மாத காலத்துக்கு அப்ரிதியின் நடத்தையை கண்காணிக்க வேண்டும். இவர்கள் தவிர, சோயப் மாலிக், ராணா நவீது <உல் ஹசன், கம்ரான் மற்றும் உமர் அக்மல் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விபரம்:
இதன்படி சோயப் மாலிக், ராணா இருவருக்கும் ஒரு ஆண்டுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடு என எங்கும் கிரிக்கெட் விளையாட தடை மற்றும் 20 லட்ச ரூபாய் அபராதம், தவிர, அக்மல் சகோதரர்கள் மற்றும் அப்ரிதி ஆகிய மூவருக்கும் தலா 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. முகமது யூசுப், யூனிஸ் கான் இருவரும் தேசிய அணியில் விளையாட முடியாது. ஆனால் உள்ளூர் மற்றும் இங்கிலாந்து கவுன்டி, ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க அனுமதிக்கப் பட்டுள்ளது. இதற்கான கால வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் இவர்கள் அணிக்கு திரும்பலாம்.





எதிர்ப்பும், ஆதரவும்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்ட அதிரடி தடை மற்றும் அபராதத்திற்கு அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே இரு மாறுபட்டக் கருத்துக்கள் நிலவுகின்றன. முன்னாள் வீரர்கள் தெரிவித்த கருத்துக்களில் சில:
இன்சமாம் உல் ஹக் (பாக்., முன்னாள் கேப்டன்)
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனியர் வீரர்களான முகமது யூசுப், யூனிஸ் கான் இருவருக்கும் அளித்துள்ள தண்டணை ஏற்றுக் கொள்ள முடியாதது. அவர்கள் தவறு செய்திருந்தால், எச்சரிக்கை விடுத்திருக்கலாம். இதை தவிர்த்து விட்டு, ஆயுட் கால தடையை வழங்கியுள்ளனர். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தவறு செய்த கம்ரான், உமர் அக்மல் மற்றும் அப்ரிதி ஆகியோருக்கு தற்போது தண்டணை வழங்கியிருப்பது தாமதமான செயல். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. தடை செய்யப்பட்டுள்ள வீரர்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.
ஜாகிர் அப்பாஸ் (முன்னாள் பாக்., வீரர்)
முகமது யூசுப், யூனிஸ் கான் இருவர் மீது விதிக்கப்பட்டுள்ள தடை, வருத்தம் அளிக்கும் விஷயம். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு கிரிக்கெட் போர்டு எடுத்த முடிவு பாராட்டத்தக்கது.
அப்துல் காதிர் (பாக்., முன்னாள் கேப்டன்)
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு எடுத்துள்ளது துணிச்சலான முடிவு. இந்த முடிவில் நிலைத்திருக்க வேண்டும். அது தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உகந்தது. சீனியர் வீரர்களுக்கு இந்தத் தண்டணை தேவையானது தான். அப்போது தான் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வர்.
மோசின் கான் (பாக்., தேர்வுக் குழு தலைவர்)
தடை செய்யப்பட்டுள்ளவர்கள் அணியின் முன்னணி வீரர்கள். அவர்களுக்கு மாற்றாக தகுதியான வீரர்களை இடம் பெறச் செய்வது மிகவும் கடினம். இருப்பினும் கிரிக்கெட் போர்டின் முடிவை ஆதரிக்கிறேன்.



பாக்ஸ் செய்திகள்:
வரலாற்றில் முதல் முறை
பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நேரத்தில் 7 வீரர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது இது தான் முதல் முறை. கடந்த 2000 ல் சூதாட்ட சர்ச்சை தொடர்பாக சலீம் மாலிக் உள்ளிட்ட சில வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது ஆஸ்திரேலிய தொடரில் அடைந்த தோல்விக்காக கடும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பி.சி.பி., மறுப்பு
யூசுப் மற்றும் யூனிஸ் கானுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மறுத்துள்ளது. இதன் சட்ட ஆலோசகர் தபாஜுல் ரிஸ்வி கூறுகையில்,""யூசுப் மற்றும் யூனிஸ் கான் ஆகியோர் உள்ளூர் மற்றும் அன்னிய மண்ணில் நடக்கும் கவுன்டி போன்ற போட்டிகளில் விளையாடலாம். பாகிஸ்தான் அணி சார்பில் மட்டுமே சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது. இதனால் இது ஆயுட் தடை அல்ல,'' என்றார்.
பாக்., அணியின் எதிர்காலம்?
தற்போது அணியில் விளையாடி வரும் 7 வீரர்கள் மீது, ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, அணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி <உள்ளது. அடுத்த மாதம் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நிலையில், வீரர்கள் மீதான தடைகள் அணியின், நலனை பாதிப்பது <உறுதி.
வீரர்களின் தடை விபரம்:
முகமது யூசுப் (35)
பாகிஸ்தான் அணிக்காக 22 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி வரும் இவர், 88 டெஸ்ட் (7431 ரன்), 282 ஒருநாள் போட்டிகள் (9624 ரன்) மற்றும் ஒரு "டுவென்டி-20' (20 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். பி.சி.பி.,க்கு எதிராக செயல்பட்டதால், இவருக்கு தேசிய அணியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
யூனிஸ் கான் (32)
பாகிஸ்தான் அணியில் கடந்த பத்து ஆண்டுகளாக விளையாடி வரும் இவர், சிறந்த "மிடில் ஆர்டர்' வீரர். இதுவரை 63 டெஸ்ட் (5260 ரன்), 202 ஒருநாள் போட்டிகள் (5765 ரன்) மற்றும் 20 "டுவென்டி-20' (430 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். கடந்த 2009 "டுவென்டி-20' உலக கோப்பை வென்று தந்தவர். பி.சி.பி.,க்கு எதிராக செயல்பட்டதால், இவருக்கு தேசிய அணியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அப்ரிதி (30)
அணியின் சிறந்த "ஆல் ரவுண்டரான' இவர் சமீபத்தில் "டுவென்டி-20' அணியின் கேப்டனானார். இவர், 26 டெஸ்ட் (1683 ரன்), 293 ஒருநாள் போட்டிகள் (5957 ரன்) மற்றும் 27 "டுவென்டி-20' (495 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை கடித்து சேதப்படுத்தியதால், அப்ரிதிக்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தவிர, இவரது நடவடிக்கை 6 மாத காலத்துக்கு கண்காணிக்கப்பட உள்ளது.
சோயப் மாலிக் (28)
சிறந்த பேட்ஸ்மேனான இவர், அவ்வப்போது பவுலிங்கிலும் அசத்துவார். 29 டெஸ்ட் (1517 ரன்), 190 ஒருநாள் போட்டிகள் (5141 ரன்) மற்றும் 30 "டுவென்டி-20' (603 ரன்) ஆட்டத்தில் விளையாடியுள்ளார். இவர், போர்டுக்கு எதிராக செயல்பட்டது மற்றும் கோஷ்டி சேர்த்தது போன்ற காரணங்களுக்காக ஒரு ஆண்டு தடை, 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராணா நவீது (32)
மிதவேகப்பந்து வீச்சாளரான இவர் இதுவரை 9 டெஸ்ட் (18 விக்கெட்), 74 ஒருநாள் போட்டிகள் (110 விக்.,) மற்றும் 4 "டுவென்டி-20' (5 விக்.,) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். இவர், போர்டுக்கு எதிராக செயல்பட்டது மற்றும் கோஷ்டி சேர்த்தது போன்ற காரணங்களுக்காக ஒரு ஆண்டு தடை, 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கம்ரான் அக்மல் (28)
கடந்த 2002ல் அறிமுகமான இவர், 2004 முதல் ஐந்து ஆண்டுகளாக அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக இருந்தார். இதுவரை 48 டெஸ்ட் (2550 ரன்), 115 ஒருநாள் போட்டிகள் (2288 ரன்) மற்றும் 28 "டுவென்டி-20' (451 ரன்) ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், இவருக்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
<உமர் அக்மல் (19)
சமீபத்தில் அணியில் இடம் பெற்று அசத்தி வந்த இவர், இதுவரை 6 டெஸ்ட் (578 ரன்), 15 ஒருநாள் போட்டிகள் (498 ரன்) மற்றும் 6 "டுவென்டி-20' (159 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், இவருக்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

Wednesday, March 10, 2010

ஒரு தலை காதல் ..

என் அன்பு தோழர்களுக்கு ...
நான் படித்ததில் பிடித்த ஓர் காதல் கவிதை
ஒரு தலை காதல் ...
------------------------------------------------------------------------------------


காதோரம் களைந்து நிற்கும்,
கார்கூந்தல் சொல்லுமடி,
எந்தன் காதலை சொல்லிட,
எடுத்த முயற்சி எத்தனை என்பதை..!

தோளில் சாய்ந்து,
தோழன் என்றாய்;
இடதுபக்க என்னிதயம் சொல்லவில்லையோ..?
இவன் துடிப்பது உனக்காக என்று..

மண்ணில் வேரூன்றி,
விண்ணில் விழியூன்றி,
புற்களாய் காத்திருந்தேன்-காதலி நீ,
பனித்துளியாய் வீழ்ந்திடுவாய்;-என் மீது,
சில மணித்துளியாவது வாழ்ந்திடுவாய் என்று...

தொழில்நுட்பம் அத்தனைக்கும்,
நன்றி சொல்ல அட்டவணையிட்டேன்;
தொலைபேசியில் உன்குரல் கேட்ட பின்பு;
கணிணியில் உன்முகம் பார்த்த பின்பு...

கொலைகாரனாகிடுவேன்,
கொசு கடித்தால் கூட-இருந்தும்,
சிலையானேன்,
உன்வீட்டு நாய் கடித்தும்;
நல்லவளே நீ என்னை,
நலம் விசாரித்திட வருவாயென்று...

என் பெயரை எழுதிடசொல்லி,
எழுதுகோலை கையில் கொடுத்தேன்;
ஏதோ கிருக்கியபடி,
எங்கேயோ சென்றிட்டாய்...
அப்போது புரிந்திடவில்லை,
அன்பே உன் கிறுக்கல்கள்;
இப்போது இனம் கண்டேன்,
இவன் ஒரு கிருக்கனென்று...

அழகான உன்னுருவம் கண்டு,
ஆச்சரியப்பட்டதோ ஆகாயச்சூரியனும்?..!
உன் நிஜம் கொண்டு,நகல் எடுத்து,
நிழல் என்று பெயரிட்டதோ?
நிஜம் எது? நிழல் எது?
அந்த அடையாளம் கண்டுகொள்ள,
நிறம்கொடுக்க மறுத்ததோ?
நிழலுக்கு மட்டும்.....

இலக்கண இலக்கியங்கள்,
இன்று பயின்றேன்;
இனியவளே! உனக்காக,
இதுவரை இல்லாத,
இதிகாசமொன்று எழுதிட,

கவிதையென்றால் என்னவென்று,
கேள்விக்கணை தொடுத்த காலமொன்று..
காதல் என்னில் விதைந்த பின்னே,
'கவிஞன்' என்ற வார்த்தை,
என் பெயருக்கு முன்னே...!

அலையாய் வந்திட்டேன்;
சிலையே உன்னிடம்;
என் காதலை சொல்லிட..
யாரோ ஒருவரின்,
திருமதியாகிட,
திருமண ஓலையுடன்,
திசையொன்றில் நீ நிற்க;
நுரையாய் கரைந்தேனடி;
நூறு முறை அழுதேனடி...

மனதில் விதைந்த காதல்,
மண்ணில் புதைந்து போனதென்ன??
சொல்ல வந்த காதலை,
சோகம் வந்து சூழ்ந்ததென்ன??
மேகம் ஒன்று கூடாமல்,
காதல் போட்ட கோலத்தை,
பருவமழை தொடர்ந்து வந்து,
பக்குவமாய் அழித்ததென்ன??

திறக்கப்படாத புத்தகமாய்--என் காதல்,
எரிக்கப்பட்ட நோக்கமென்ன??
அரங்கேறாத நாடகமாய்,
அவைகளைந்த அவசரமென்ன???

ஆயிரம்பேர் ஆறுதல் சொல்ல,
ஆத்திரத்தில் மது அருந்த,
பெற்றவள் கொடுத்திட்ட உயிரைக்கூட,
பெட்ரோலால் எரித்திட நினைத்தேனடி;
அடியே உன்னை,
அடியோடு மறந்திட…

உயிர் கொடுத்திட்ட,
உன் அன்னைக்கு மட்டும்,
மகராசி பட்டம் கொடுத்திட்டாய்...
உனக்காக உயிர்உதிர்த்திட,
உரிமையோடு உயிர் வாழ்ந்திடும்,
எனக்கு மட்டும்,
ஏன் இந்த பரதேசி பட்டம்...?

நாட்கள் நகர்ந்திட,
நானும் மறந்திட,
நிரந்தரமாய் அல்ல;
அவ்வப்போது உன் நினைவுகளுடன்...

கணமான என் காதல் நினைவுகளை,
காலம் கடந்து யோசித்தேன்...
காவியமாய் எழுதிட எண்ணி,
கண்ணீரால் கவி பாடினேன்..

முன்னுரையில்லாது முடிவுரையான,
என் காதலுக்கு,
நீ வைத்திட்ட முற்றுப்புள்ளியையே,
என் கவிதைக்கும் முற்றுப்புள்ளியாக்கி,
முறைத்துப்பார்த்து வெறுக்கிறேன்;
முதன்முறையாக முற்றுப்புள்ளியை.......

Monday, March 8, 2010

ஆஸ்கர் 2010: தி ஹர்ட் லாக்கருக்கு 6; அவதாருக்கு 3 விருதுகள்!

ஆஸ்கர் 2010: தி ஹர்ட் லாக்கருக்கு 6; அவதாருக்கு 3 விருதுகள்!
2009-ம் ஆண்டின் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 6 விருதிகளை தட்டிச் சென்றது தி ஹர்ட் லாக்கர் திரைப்படம்.


9 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்தன.

தி ஹர்ட் லாக்கரை இயக்கிய கேதரின் பிக்லோ, அவதார் இயக்குநர் கேமரூனின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்கர் விருது வரலாற்றில் முதல் முறையாக சிறந்த இயக்குநர் விருது வென்ற பெண் கேதரின் பிக்லோதான் என்பது மிக முக்கியமானது

.
சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த ஒரிஜினல் ஸ்கிரீன்பிளே ஆகிய 6 பிரிவுகளில் தி ஹர்ட் லாக்கர் விருதுகளை வென்றுள்ளது.


சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான விருதுகள் மட்டுமே அவதாருக்கே கிடைத்தன.

சிறந்த நடிகருக்கான விருது க்ரேஸ் ஹார்ட் படத்தின் நாயகன் ஜெஃப் பிரிட்ஜஸுக்குக் கிடைத்தது.

சிறந்த நடிகைக்கான விருது தி ப்ளைண்ட் சைட் பட நாயகி சான்ட்ரா புல்லக்குக்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகைக்கான விருது நோ நிக்கிக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது கிறிஸ்டோபர் வால்ட்ஸுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத்துக்கான விருதுகள் அவதாருக்கே கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவை தி ஹர்ட் லாக்கருக்கு கிடைத்தது பார்வையாளர்களை அதிர வைத்தது. ஜேம்ஸ் கேமரூனுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.
இத்தனைக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கூட சொல்லிக் கொள்ளும்படியான வசூலை அந்தப் படம் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறித்த சர்ச்சை கிளம்பியுள்ளது.
2009ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் முழு விவரம்:

சிறந்த நடிகர்: ஜெப் பிரிட்ஜஸ், படம்: க்ரேஸி ஹார்ட்

சிறந்த நடிகை: சான்ட்ரா புல்லக், படம்: தி ப்ளைண்ட் சைட்

சிறந்த படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த இயக்கம்: கேதரின் பிக்லோ, படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த எடிட்டிங்: பாப் முராவ்ஸ்கி – கிறிஸ் இன்னிஸ், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த சவுண்ட் எடிட்டிங்: பால் என்ஜோ ஒட்டோசன், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: பால் என்ஜோ ஒட்டோசன் – ரே பெக்கட், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்: மார்க் பால், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த கலை இயக்கம்: ரிக் கார்ட்ர், ராபர்ட் ஸ்ட்ராம்பர்க் (கலை இயக்கம்), கிம் சின்க்ளேர் (செட் அலங்காரம்), படம்: அவதார்

சிறந்த ஒளிப்பதிவு: மோரோ பியரோ, படம்: அவதார்

சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ்: ஜோ லெட்டரி, ஸ்டீபன் ரோஸன்பாம், ரிச்சர்ட் பென்ஹேம் மற்றும் ஆண்ட்ரூ ஆர் ஜோன்ஸ், படம்: அவதார்

சிறந்த துணை நடிகர் – கிறிஸ்டோபர் வால்ட்ஸ். படம்: இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்

சிறந்த துணை நடிகை – மோ நிக்கி, படம்: பிரிஸியர்

சிறந்த அனிமேஷன் படம்: அப்

சிறந்த இசை: மைக்கேல் ஜியாசினோ, படம்: அப்

சிறந்த இசை (ஒரிஜினல் ஸ்கோர்): இசை – பாடல்: ரையன் பிங்காம் மற்றும் டி போன் பர்னட், படம்: க்ரேஸி ஹார்ட்

சிறந்த டிசைனிங்: சாண்டி பாவல், படம்: தி யங் விக்டோரியா

சிறந்த டாகுமெண்டரி படம்: தி கோவ் (லூயி ஸியோஸ் மற்றும் பிஷர் ஸ்டீவன்ஸ்)

சிறந்த டாகுமெண்டரி (குறும்படம்): மியூசிக் பை ப்ரூடென்ஸ் (ரோஜர் ரோஸ் வில்லியம்ஸ் மற்றும் எலினார் பர்கெட்)

சிறந்த வெளிநாட்டு மொழிப் படம்: தி ஸீக்ரெட் இன் தேர் ஐஸ் (El Secreto de Sus Ojos), அர்ஜன்டைனா, இயக்கம்: ஜான் ஜோஸ் காம்பெனல்லா

சிறந்த மேக்கப்: பார்னி பர்மன், மின்டி ஹால் மற்றும் ஜோயல் ஹர்லோ

சிறந்த குறும்படம்: தி நியூ டெனன்ட்ஸ், இயக்கியவர்: ஜோக்கிம் பேக் – டிவி மேக்னஸ்ஸன்

சிறந்த அனிமேஷன் குறும்படம்: லோகரோமா, இயக்கம்: நிகோலஸ் ஷ்மெர்கின்

Friday, March 5, 2010

சச்சினுக்கு பாரத் ரத்னா?

சச்சினுக்கு விரைவில் பாரத் ரத்னா!
உலகின் முதல் நிலை கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய அரசு பாரத் ரத்னா விருதை வழங்கவிருக்கிறது.
இதுகுறித்த ஆலோசனை நடந்து வருவதாகவும், உரிய நேரத்தில் சச்சின் பாரத் ரத்னா விருதுடன் கௌரவிக்கப்படுவார் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
20 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவரும் சச்சின் டெண்டுல்கள், தொடர்ந்து சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இவரது சாதனைகளை யாராலும் அத்தனை சுலபத்தில் முறியடிக்க முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 200 ரன்களை அவுட்டின்றி குவித்து உலகை வியக்கச் செய்தார்.
இதைத் தொடர்ந்து சச்சினுக்கு உலக அளவில் பாராட்டுக்கள் குவிகின்றன. சச்சின் இந்தியாவின் பெருமையை உலக விளையாட்டரங்கில் பட்டொளி வீசிப் பறக்கச் செய்துவிட்டதா பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருந்தார்.
பிரபல கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சச்சின்தான் இந்திய கிரிக்கெட்டின் இணையற்ற வீரர் என்று பாராட்டியுள்ளனர்.
இன்னொரு பக்கம், தேசத்தின் மதிப்பு மிக்க ஒரு குடிமகனை உயர்ந்த விருதான பாரத் ரத்னா கொடுத்து கவுரவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் தீவிரமாக எழுந்துள்ளன.
மும்பையில் வசிப்பது தொடர்பாக சச்சினின் கருத்துக்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் சிவசேனா காட்சி, சச்சினுக்கு உடனடியாக பாரத் ரத்னா வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
கட்சி பேதமின்றி இப்போது அனைத்து தலைவர்களுமே சச்சினுக்கு பாரத் ரத்னா வழங்க வலியுறுத்தி வருகின்றனர். பொதுமக்கள், கிரிக்கெட் ரசிகர்கள், சச்சினின் வெறித்தனமான ரசிகர்கள் என அனைவருமே இந்த விஷயத்தில் ஒரே குரலை எதிரொலிக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து, சச்சின் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா தருவது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசு.
பாராளுமன்றத்திலும் நேற்று இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது. சச்சினுக்கு பாரத் ரத்னா பற்றி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அப்போது அரசு தரப்பில் கூறப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், சச்சினுக்கு மிக உயர்ந்த மரியாதையை பாரத் ரத்னா போன்ற விருதினை உரிய நேரத்தில் மத்திய அரசு வழங்கும் என்றார்.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சச்சின்!

இன்ஃபோஸிஸ் இப்படிச் செய்யலாமா?

இன்ஃபோஸிஸ் இப்படிச் செய்யலாமா?

ணக்கம்…

E-Farmers… இப்படி ஒன்று சாத்தியமா?. நமது உணவு தேவையை பூர்த்தி செய்யும் கடவுள் என்ற முதலாளி கண்டெடுத்த தொழிலாளி நேரடியாக வயல்களில் விவசாயம் செய்யும் போது, இது என்ன புது விதமான விவசாயிகள் ?

கண்டிப்பாக இது எந்த ஒரு நிறுவனத்திற்கான‌ விளம்பர யுத்தி கிடையாது? விவசாய நிலங்களை கூறு போட்டு விற்று , நவீன ஜமீன்தார்களை உருவாக்கும் எண்ணமும் கிடையாது.

கிராமப்புறத்தில் இருந்து, பொருளாதார காரணங்களுக்காக, நகர்புறம், வெளி நாடுகளுக்கு குடி பெயர்ந்த, முதல் தலைமுறை, அல்லது அடுத்த தலைமுறை விவசாய பூர்விக குடும்பங்களை இணைக்க ஒரு மனப்பூர்வமான முயற்சி தான் E-Farmers ன் நோக்கம் .

ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை? அவனவன் வேலையை ஒழுங்கா பாத்துகிட்டு தானே இருக்கிறான். அது போதாதா?

ஆமாங்க, போதாது தான்… சும்மா விலைவாசியை பத்தி பேசிகிட்டு, ஃபாஸ்ட் -புட் சாப்பிட்டுக்கிட்டு, அப்பப்போ அரசியல் கதை பேசிகிட்டு, சினிமா, டிவி பாத்துக்கிட்டே இருந்தால், நாளைக்கு சாப்பாடு பற்றி யார் கவலை படுவது?

பங்குச் சந்தை, உலகப் பொருளாதாரம் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நம்மில் பலருக்கு, நமது உணவு பொருட்கள் விளைச்சல், அதைச் சார்ந்த நெருக்கடிகள், அதன் எதிர்காலம் பற்றி எந்த அளவு தெரியும்…?

எனக்கு இன்னும் விவசாயத்துடன் இருக்கும் தொடர்புகளினால், எந்த ஊர், நாடு சென்றாலும் அங்குள்ள விவசாயம் சார்ந்த விஷயங்களில் கவன ஈர்ப்பு, தானாகவே வந்து விடுகிறது.

பெங்களூர் புற நகர் மாவட்ட பகுதியில் சமீபத்தில் பார்த்த, தெரிந்து கொண்ட இரு விஷயங்களினால் மிகவும் மனம் பாதிக்கப்பட்டேன்.

1.இன்ஃபோஸிஸ் நிறுவனம் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்களை, நிறுவனத்தின் புதிய நிர்வாக வளாகத்திற்காக, தனித்தனி விவசாயிகளிடம் சிறு சிறு நிலங்களை வாங்கி சேர்த்துள்ளது.

2.ஏரியின் மடிப்பகுதியில், நல்ல நெல் விளையும் நிலம் , 4 அடி உயரத்திற்கு புல் கூட முளைக்காத வெள்ளை மண்ணால் நிரப்ப பட்டுள்ளது. அருகில் உள்ள வயலில் நெல் விளைந்து கதிர் அடிக்கும் பருவத்தில் உள்ளது. உபயம்: ஏதோ ஒரு கட்டிட நிறுவனம்!

நான் இன்ஃபோஸிஸ் அல்லது அந்த கட்டிட நிறுவனத்திற்கு அல்லது அவர்களின் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. ஆனால் அவர்களின் சுயநலத்திற்காக, தாயின் கருவறையை அறுத்தெரியும் அளவுக்கு கொடிய செயல் நெஞ்சை உலுக்குகிறது.

பெங்களூர் புற நகர் மாவட்டம், காய்கறி விளைச்சலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது அனைவருக்கும் தெரியும். அதை அழித்து விட்டுத்தான் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?

நம் நாட்டில் விவசாயம் செய்ய லாயக்கற்ற நிலங்கள் எவ்வளவோ இருக்கிறது. அதை தொழில் வளமாக்குங்களேன். பெங்களுரை விட்டால் வேறு ஊர்களே கர்நாடகத்தில் நாராயணமூர்த்தி அவர்களுக்கு தெரியவில்லையா? அவர் மனது வைத்தால், வறண்ட ஊர்களான பிஜப்பூர் போன்ற ஊர்களை இன்ஃபோஸிஸ் நகரம் ஆக்க முடியும்.

இந்தியா, மேல் நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியினால் அதிகம் பாதிக்கப்படாதற்கு முக்கிய காரணம், நமது வேளாண் தன்னிறைவு தான் முக்கிய காரணம்.

நமது நாடு பருவ மழையை நம்பியுள்ள நாடு. மழை பொய்த்தால் வறட்சி, அதிகம் பெய்தால் வெள்ளத்தினால் விளைச்சல் பாதிப்பு. 100 கோடி மக்களின் உணவு தேவை இயற்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உண்மை இது தான்.

இப்பொதே நாம் பருப்பு, சக்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மேலும் மேலும் நாம் நம் விளை நிலங்களை தினம்தோறும் இழந்து கொண்டிருக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால்… குழந்தைகள் எதிர்காலத்தில் அல்ல, நமது காலத்திலேயே உணவு திண்டாட்டம் வந்து விடும். அரிசி, பருப்பு விலையை கவனித்தாலே தெரியும்.. எல்லாவற்றுக்கும் ஆளும் அரசு தான் என்று அரசியல் கட்சிகளை போல் பொதுவாக குற்றம்சாட்டுவது தேவையில்லாதது.

‘விளைச்ச‌ல் குறைவு, தேவை அதிகம்’ இரண்டும் தான் விலையேற்றத்தின் முக்கிய காரணம்.

இதுக்கு தனி மனிதனாகிய நான் என்ன செய்ய முடியும். இது அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை என்று தோன்றுகிறதா?

யோசிப்போம்.. புதியதாக யோசிப்போம்!

-mayavi-

வணக்கம் தோழர்களே

வணக்கம் தோழர்களே நான் இந்த வலை தளத்தில் என்னுடைய மனதில் தோன்றும் சிறு கருத்துகளையும் , எனக்கு கிடைக்கும் சிறு தகவல்களையும் உங்களுடன் பகிந்து கொள்ள ஆசைபடுகிறேன் எனவே நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டுமென உங்களை கேட்டு கொள்கிறேன்
நீங்கள் என்னுடைய வலைபதிவிற்கான லிங்க் http://suresh-themayavi.blogspot.com/ உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி விட வேண்டும் என்னுடைய கருத்துகளை பரப்புவதற்கு உதவ வேண்டும் .

இவன்
உங்கள் அன்பு தோழன்
மாயாவி
சுரேஷ் ...............